Friday, July 10, 2015

Laws of Love - Mahatma Gandhi

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=150

 
அன்பின் விதிகள்
-- மகாத்மா காந்தி


பேரழிவுகளுக்கு மத்தியிலும் வாழ்வு தொடர்வதை நான் கண்டிருக்கிறேன் . எனவே அழிவை காட்டிலும் மேலான ஒரு விதி இருக்க வேண்டும். அத்தகைய சட்ட ஒழுங்கின் கீழ் மட்டுமே ஒரு சமுகம் புரிதலுடையதாகவும், வாழ்கை, வாழ தகுதி மிக்கதாகவும் ஆகிறது. அது வாழ்வின் விதியாகவும் இருக்குமானால் நாம் அதை நம் அன்றாட நிகழ்வுகளில் கடைபிடிப்பது அவசியமாகிறது.

எங்கெல்லாம் போர் இருக்கிறதோ , எங்கெல்லாம் எதிராளிகள் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் அன்பால் வென்றிடலாம். எனது சொந்த வாழ்வில், பல சமயங்களில், அழிவின் கட்டளைகள் அளிக்க முடியாத விடைகளை அன்பின் கட்டளைகள் தர கண்டிருக்கிறேன்.

அஹிம்சா மனநிலையை அடைய சீரிய மற்றும் சிரமமான பயிற்சி தேவைப்படுகிறது. அத்தகைய வாழ்வு ஒரு சிப்பாயின் வாழ்வை போன்ற இயக்க ஒழுங்கை உடையது. நம் மனம், உடல், சொல் செயல் இவை ஒத்து இயங்கும் போது மட்டுமே சரியான துல்லிய நிலையை அடையமுடிகிறது.

சத்தியம் மற்றும் அஹிம்சையை நாம் நம் வாழ்வின் கட்டளைகளாக பின்பற்ற உறுதி பூனுவோமேயானால், நம் முன் வரும் ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு பிறக்கும். இயற்கையின் விதிகளை பின்பற்றும் விஞ்ஞானி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துவது போல, அன்பின் விதிகளை விஞ்ஞான துல்லியத்தோடு கடைபிடிக்கும் ஒவ்வொரு மனிதனும் அதிக அற்புதங்களை நிகழ்த்துகிறான். இயற்கையின் விசைகளான மின்சக்தி போன்றவற்றை விட அஹிம்சை மிக நுட்பமானதும் அற்புதமானதும் ஆகும். அன்பின் விதிகள் நாமறிந்த நூதன விஞ்ஞானத்தை காட்டிலும் வல்லமை பொருந்திய விஞ்ஞானம் ஆகும்.

கரு: உங்கள் வாழ்வின் அன்பின் விதிகள் என்ன?

Friday, July 3, 2015

Be A Light Unto Yourself- - J. Krishnamurti

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=183


நமக்கு நாம் ஒளி விளக்காக இருத்தல்
- .J. கிருஷ்ணமூர்த்தி

விழிப்புணர்வுடன் இருப்பது என்பதன் அர்த்தம் நாம் நடப்பது, நாம் அமர்வது, நம் வார்த்தைகள், நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் மனதில் தோன்றும் எதிர் செயல்கள் இவை அனைத்தையும் நாம் கவனித்து நோக்குதல் ஆகும்.

இந்த விழிப்புணர்வு என்பது தன்னுணர்வு இல்லாத மனம் மற்றும் அறிவு சார்ந்த மனம், அந்த மனதில் தேங்கி இருக்கும் துயரங்கள், மனித இனத்தின் மொத்த துயரங்கள் இவை அனைத்தயும் உள்ளடக்கியது. ஒவ்வொன்றையும் நல்லது, கெட்டது என்று நாம் மதிப்பீடு செய்வோமானால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க முடியாது.

விழிப்புணர்விலிருந்து சிரத்தையும் கவனமும் பிறக்கின்றன. நம்முடைய விருப்பு வெறுப்புகளும், தேர்வும், இல்லாத விழிப்புணர்வில் வெறும் கவனித்தல் மட்டுமே இருக்கிறது. இதற்கு மனதளவில் நிறைய இடம் தேவைப் படுகிறது, நம் மனதில் ஆசைகளும், அபிலாஷைகளும், துயரமும், வலியும் நிரம்பி இருக்கும் பொழுது உற்று நோக்குவதற்கோ, கவனிப்பதற்கோ தேவையான இடம் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் மனம் தன்னுடைய செயல்கள் மற்றும் எதிர் செயல்களிலே மாட்டிக் கொண்டும், சுழன்றுக் கொண்டும் இருக்கிறது. நம் மனதின் ஒவ்வோரு மூலையையும் நம்மால் ஆராய முடிய வேண்டும். ஒரு சிறிய இடத்தில் கூட இருட்டை ஆராய நாம் பயப்பட்டோம் என்றால் அதில் இருந்து மாயையும் மருட்சியும் பிறக்கும்.

ஆழ்ந்த கவனம் இருக்கும் நிலையில் மட்டும்தான் நாம் நமக்கே விளக்காக இருக்க முடியும். தினசரி வாழ்வின் ஒவ்வொரு செயலும் அந்த ஒளியிலிருந்து வரும் பொழுது - அது சமையல் செய்வதாக இருந்தாலும்,  பணியை செய்வதாக இருந்தாலும், அது தியானமாக இருக்கும்.

Saturday, June 13, 2015

Not Minding What Happens - Eckhart Tolle

Oriignal Reading
http://www.awakin.org/read/view.php?tid=2089

நடப்பதை எதிர்க்காதது
- எக்ஹார்ட் டொல்லே

இந்தியாவின் புகழ் பெற்ற தத்துவ ஞானி J.கிருஷ்ணமூர்த்தி சுமார் 50 வருடங்களுக்கு உலகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத விஷயங்களைப் பற்றி விவரிக்க முயற்சி செய்தார்,. தன் வாழ்க்கையின் பிற்பகுதியில். ஒரு சொற்பொழிவின்போது, அங்கிருந்த மக்கள் ஆச்சரியப் படும் விதத்தில் தன் வாழ்வின் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னார். அனைவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். கூட்டத்தில் இருந்த பலர் 20, 30 வருடங்களாக அவர் சொற்பொழிவுகளை கேட்டு  வந்து இருந்தாலும் அதன் சாரத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள். கடைசியாக தங்கள் ஆசான் புதிருக்கான விடையை கொடுக்கப் போகிறார் என்று நிமிர்ந்து அமர்ந்தனர்.

"என்ன நடக்கிறதோ அதை நான் எதிர்ப்பதில்லை" என்று அவர் ரகசியத்தை சொல்லி முடித்தார். அவர் அதை விளக்கவில்லை. ஆனால் இந்த சிறிய வாக்கியத்தின் உள்ளர்த்தம் மிக ஆழமானது.

நடப்பதை எதிர்க்காத போது நான் அதனுடன் ஒருமைப்பாட்டில் இருக்கிறேன். இங்கு "நடப்பது" எபன்பது அந்த தருணத்தின் தன்மையை, உருவத்தை, பண்பைக் குறிக்கும். 'எதிர்க்காதது' என்பது அதை நல்லது என்றோ, தீயது என்றோ வகைப்படுத்தாமல், அதை அவ்வாறே ஒத்துக் கொள்ளுதல் ஆகும்.

அப்படி என்றால் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர நாம் முயற்சிகள் எடுக்க வேண்டாம் என்று அர்த்தம் கிடையாது. கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்.
அந்த முயற்சியின் அடிப்படை, நிகழ் தருணத்துடன் ஒருமைப்பாடு என்பதாக இருக்கும்போது, அந்த செயல், உயிரின் அறிவாற்றலிடமிருந்தே நேரடியாக, சக்தியைப் பெறுகிறது.

Friday, May 1, 2015

Creativity of Silence- Dada


Oriignal Reading
http://www.awakin.org/read/view.php?tid=363


அமைதியின் படைப்பாற்றல்.
- தாதா

வாழ்வின் ஒரு புதிய அழகை நாம் அமைதியில் காணலாம். இந்த அழகைக் கண்டபின் மனதின் சலனங்கள் நிரம்பிய ஆசைகளின் மீது நம் ஈடுபாடு குறையத் துவங்கும். அப்போது நம்மை நம் படைப்பாற்றலில் இருந்து விலக்கி வைக்கும். ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்த கனவுகளின் எல்லைக் கோடுகளை நாம் காணலாம். எதிர்பார்ப்பு என்பது, எதிர்காலத்தில் எண்ணத்தை பின்தொடர்வது; இந்த தருணத்தின் அனுபவத்திற்குத் தடையாக நிற்பது.

வெளி உலகில் நாம் வேலை, செயல் இவற்றை செய்தாக வேண்டும். ஆனால் மனதின் எதிர்பார்ப்புகள் நம்மை எந்நேரமும், இந்த வெளி விளையாட்டிலேயே ஆழ்த்தி விடுகின்றன, இவ்வாறு ஆழ்ந்த மனம், இந்த நிலை மாறாமல், தன் உயிர் சக்தியை, புற உலகின் சாதாரணமான, இயந்திரத்தனமான, நாட்டங்களில் செலவழித்து விடுகிறது. இது வாழ்க்கையை பிரிவுகளாக பிரித்து, சமநிலையை பாதித்து, நம்மை நாம் அறியும் முயற்சிக்கு தடையாக இருக்கிறது.

கலையாற்றல் மிக்க நிலை என்பது வாழ்க்கையை தன்னந்தனியாக வாழ்வதால் வருவது அல்ல..அது வாழ்வின் முழுமையில் இருந்து வருவது. உடல் மனம் ஆன்மா மற்றும் உணர்வுகள் இதில் ஐக்கியமாகி உள்ளன. இந்த நிலையில் புரிதலுக்கும், செயலுக்கும் நடுவே இடைவெளி இல்லை. அறிவாற்றலுக்கும், படைப்பற்றலுக்கும் நடுவே இடைவெளி இல்லை. நிகழ் தருணத்தில் வாழ்வின் அசைவு தன்னிச்சையாக வெளிப்படுகறது.  இப்படிப் பட்டவருக்கு ஓவியம் தீட்டுவதில் உள்ள திருப்தி, சமயல் செய்வதிலும் கிடைக்கிறது. இந்த நிலையில் செயல் படுவோர் கலைஞர்கள் எனப்படுகிறார்கள். ஒருவர் எந்தத் துறையில் பணி செய்தாலும், அதன் வெளிப்பாடு எந்த விதத்தில் இருந்தாலும், அந்த உயிர் சக்தியின் தரம் அவரை ஒரு கலைஞராக்குகிறது.

கலை என்பது வெறும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் வரும் திறனோ, திறமையோ அல்ல. நம்முள்  இருக்கும் ஆத்ம அறிவின் வெளிப்பாடே கலை. இதை காண்பதற்கு முழுமையான கவனமும், அமைதியும் தேவை. ஏனெனில், நம் ஆத்ம சக்தியின் அமைதியில்தான் படைப்பாற்றல் பிறக்கிறது.

கேள்வி: உங்கள் படைப்பாற்றல் எந்த சூழ்நிலையில் தடையில்லாமல் மலர்கிறது?

Saturday, April 25, 2015

Living at the Right Speed - Carol Honore

original reading
http://www.awakin.org/read/view.php?tid=494

சரியான வேகத்தில் வாழ்தல்
- கரோல் ஆனர்

வேகம் மற்றும் நிதானம் என்பவை நம் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் குறியீடுகள்.

வேகம் என்பது பொதுவாக பரபரப்பானது, ஆளுமை செய்வது, அவசரப்படுவது, முரட்டுத்தனமானது, அலசி ஆராய்வது, மேலோட்டமானது, சுறுசுறுப்பானது, பொறுமை இல்லாதது,  எண்ணிக்கை சார்ந்தது என்று கருதப்படுகிறது.

இதற்கு எதிர்மறையாக, நிதானம் என்பது, அமைதி, ஜாக்கிரதை, கவனிப்பு, சலனமற்ற, உள்ளுணர்வு சார்ந்த, அவசரமில்லா, பொறுமையான, ஆழ்ந்து சிந்திக்கும், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையாக கருதப் படுகிறது. மக்கள், கலாசாரம், பணி, உணவு - எல்லாவற்றோடும் நிஜமான, ஆழ்ந்த தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நிதானம் தேவைப் படுகிறது.

நிதானம் என்றால் சுறுசுறுப்பில்லாத ஒரு நிலை என்று அர்த்தம் இல்லை. நிதானமாக ஒரு பணியை செய்யும்போது அதன் பலன் விரைவில் கிடைப்பதை நாம் பல விஷயங்களில் காண்கிறோம், நிதானமான மன நிலையுடன் நம்மால் துரிதமாக காரியங்களை செய்யவும் முடியும்.

நமக்கு வெளியே எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும், உள் நிதானத்துடன் எவ்வாறு நடந்து  கொள்வது என்று சில நூறாண்டுகளுக்குப் பிறகு நாம் மீண்டும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நிதான இயக்கம் என்று பெயர் கொடுக்கப் பட்டு உள்ளத

நத்தையின் வேகத்தில் எல்லாற்றையும் செய்ய வேண்டும் என்பது நிதான இயக்க்கத்தின் மையக் கருத்து அல்ல. இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளவர்கள் உங்களயும், என்னையும் போன்ற மக்கள். இந்த வேகமான், நவீன சூழ்நிலையிலும், தரமான வாழ்க்கையை விரும்புவர்கள்.

நிதான இயக்கத்த ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால் சமநிலை  என்று சொல்லலாம். எப்போது வேகமாக ஒரு செயல்பாடு தேவைப்படுகிறதோ, அப்போது வேகமாவே செயல்பட வேண்டும். எப்போது நிதானம் தேவைப்படுகிறதோ, அப்போது நிதானத்துடன் செயல் பட வேண்டும். அதாவது, ஒவ்வொரு கணத்திலும், வாழ்வின் லயத்திற்கு ஏற்ற சரியான தாளத்தை தேர்ந்து எடுக்க வேண்டும். 

கேள்வி: நீங்கள் சூழலுக்கு ஏற்ப வேகத்தை மாற்றிய ஒரு தருணத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, April 17, 2015

Self Knowledge - Gibran

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=310

Self Knowledge
சுய அறிவு
- கலீல் கிப்ரான்


சுய அறிவைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கான பதில் இப்படி வந்தது.

ஆழ்ந்த அமைதியில் இருக்கும் உங்கள் இதயத்திற்கு பகலிரவின் ரகசியங்கள் தெரியும். ஆனால் அந்த உண்மையின் குரலைக் கேட்பதற்கு உங்கள் காதுகள் ஏங்குகின்றன.

எண்ணங்களால் எப்போதும் தெரிந்ததை நீங்கள் வார்த்தைகளாலும் அறிவீர்கள். உங்கள் கனவின் மெய்யை உங்கள் விரல்கள் தீண்ட முடியும். தீண்டவும் வேண்டும்.

மறைந்திருக்கும் உங்கள் ஆத்மாவின் நீரூற்று, எழும்பி கடலினை நோக்கிப் பாய வேண்டும். அப்போது உங்களுடைய ஆழத்தின் புதையல்கள் திறந்து காண்பிக்கப் படும். ஆனால் இவற்றை எடை போட தராசு ஒன்று தயார் செய்ய வேண்டாம்.

அறிவி்ன் ஆழத்தை கோல் கொண்டும், மிடுக்கான வார்த்தைகள் கொண்டும் தேட வேண்டாம். ஏனெனில், சுயம் என்னும் கடலிற்கு கரைகளும் இல்லை, அளவும் இல்லை...

நான் உண்மையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட நான் ஒரு உண்மையை கண்டேன் என்று சொல்வது நல்லது. நான் ஆத்மாவின் பாதையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட ஆத்மாவை என் பாதையில் கண்டேன் என்று சொல்லலாம்.ஏனென்றால் ஆத்மா எல்லா பாதைகளின் மீதும் பயணிக்கிறது.

அது நடக்கும் பாதை ஒரு நேர்க் கோடு இல்லை அது ஒரு நாணலைப் போல வளர்வதும் இல்லை.. ஆத்மாவின் விரிதலானது, எண்ணில்லா இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மொட்டின் அவிழ்தல் போன்றது.

கேள்வி
உங்கள் சுய அறிவு என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்? 

Wednesday, April 8, 2015

Keep Looking and You'll See - Bo Lozoff

கவனித்தால் தென்படும்
- போ லோசோஃப்

Original Reading

உலகின் எல்லா ஞான பாரம்பரியங்களிலும் வாழ்வில் மூன்று விதிகளைக் கடைப்பிடிக்க அறிவுரை உள்ளது.
1) பொருள் மீது ஆசை கொள்ளாமல் எளிமையாக வாழ்தல்.
2) நம் வாழ்வை, நாம் விரும்பும், மற்றும் முக்கியமாக கருதும் ஒரு காரியத்திற்குஅர்ப்பணித்தல். 
3) தினமும் நம் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சிக்காக ஒரு சில நிமிடங்கள்ளாவது ஒதுக்குதல்..

வாழ்வின் அர்த்தத்தை நாம் வெளியே தேடினால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நம்மை நாமெ நிலைப் படுதிக் கொண்டு அதைத் தேடினால், அந்த அர்த்தம் நமக்காக இந்த தருணத்தில் காத்துக் கொண்டு இருப்பதை புரிந்து கொள்வோம்.(...)

தினமும் நாம் தியானத்தில் அமர்ந்து, உண்மையாக நம் உடலும் மனமும் உணர்வதைப் சாட்சியாக பார்த்தோமானால், சிறிய பெரிய சலனங்கள் மேலெழுகின்றதை உணரலாம். முதலில் இவை நம்மை தொந்தரவு செய்வது போல இருந்தாலும், நாம் கவனித்துக் கொண்டே இருந்தால், தெளிவு பிறக்கத் தொடங்குகிறது. (...)

நம்மை நாமே ஒரு சிறிய விதத்தில் கூட ஏமாற்றிக் கொண்டோம் என்றால், நம் ஆன்மீகப் பயிற்சி அதைக் காட்டிக் கொடுக்கும். அது என்ன தவறு என்பதை நாம் கவனமாக தேடினால், அது தென்படும். அதன் பிறகு நம் தவறை நாம் திருத்திக் கொள்ள முயற்சி செய்தால், நம்மை பற்றியும், இந்த உலகைப் பற்றியும், நாம் சிறிது புரிந்து கொண்டு இருப்போம்.

கேள்வி
உங்கள் வாழ்வில் நீங்கள் முக்கியமாக கருதும் ஒரு காரியம் என்ன?