Thursday, February 26, 2015

Serving is Different From Helping and Fixing by Rachel Naomi Remen


Original Reading:
http://www.awakin.org/read/view.php?tid=940 

 
சேவை, உதவி, சரி செய்தல் - வித்தியாசங்கள்.
- ரேச்சல் நவோமி ரேமென்  


சமீப காலத்தில் என்னால் எப்படி உதவ முடியும் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்து உள்ளது. அதையே சற்று ஆழமாக என்னால் எப்படி சேவை செய்ய முடியும் என்று கேட்கலாம்.

சேவை என்பது உதவியிலிருந்து வித்தியாசப் படுகிறது. உதவி என்பது சரி சமமான நிலையில் உள்ள இருவருக்கு இடையிலான உறவு அல்ல. நான் ஒருவருக்கு உதவும் போது அவர் என்னை விட பலவீனமாக இருப்பதாக என் மனதில் எண்ணம் தோன்றுகிறது. நான் இவ்வாறு நினைப்பதை அவராலும் உணர முடியும். இதனால் அவருடைய தன்மானம், சுய மரியாதை, பூரணத்துவம் ஆகியவற்றில் குறைப்பாடு ஏற்படுகிறது. ஆக, அவருக்கு நான் கொடுப்பதை விட, அவரிடம் இருந்து நிறைய எடுக்கப் படுகிறது.

ஆனால், நாம் சேவை செய்யும்போது, நம் பலத்தை மட்டும் கொண்டு செய்வதில்லை. நம் அனுபவங்கள், பலவீனங்கள், வரம்புகள், காயங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான நிலையில் இருந்து செய்கிறோம். நம்மில் இருக்கும் பூரணத்துவத்தைக் கொண்டு வாழ்வின் பூரணத்துவத்திற்கு சேவை செய்கிறோம். சேவை என்பது சரி சமமான நிலையில் உள்ள இருவருக்கு இடையிலான உறவு.

உதவி என்பதன் கூடவே, கடன் என்பதும் வந்து விடுகிறது. ஆனால் சேவை என்பது ஒரு பரஸ்பர பரிமாற்றம். இதில் கடன்படுவது என்பது இல்லை. நாம் எந்த அளவுக்கு சேவை செய்கிறேனோ, அந்த அளவுக்கு நமக்கும் திருப்தியும், நன்றி உணர்வும் நிலைக்கின்றது.

சேவை என்பது ‘சரி செய்தல்’ என்பதில் இருந்தும் வித்தியாசப் படுகிறது. ஒருவரை உடைந்து போனவராக பார்க்கும் பொழுதுதான் அவரை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இந்த சமயத்தில் இன்னொருவரின் பூரணத்துவத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.

நமக்கும், நாம் சரி செய்ய முயலும் நபர் அல்லது சூழ்நிலைக்கும் ஒரு இடைவெளி உருவாகிறது. சரி செய்வது என்பது ஒரு மதிப்பெண் போடும் செயல் ஆகும். இந்த செயல், தன் இடைவெளியால், இருவருக்கிடையே உள்ள தொடர்பை குறைத்து, நாம் வேறு, அவர் வேறு என்ற அனுபவத்தை உருவாக்குகிறது.

சேவை என்பது, தூரத்தில் இருந்து செய்ய முடியாதது. யார் யாரிடம் நாம் ஒருமையை உணர்கிறோமோ, எதைத் தொட நம் மனம் அஞ்சுவதில்லையோ, அவருக்கும், அதற்கும் தான், நாம் சேவை செய்ய முடியும். வாழ்க்கை புனிதமானது என்பதால் நாம் அதற்கு சேவை செய்கிறோம்..அது உடைந்து இருக்கிறது என்பதால் அல்ல.

Ancient Law of Hospitality by Thomas Berry


Original Reading:http://www.awakin.org/read/view.php?tid=729

விருந்தோம்பலின் தர்மம்
- தாமஸ் பெர்ரி


நம்மிடம்  உள்ளதைப்  பகிர்ந்து  கொள்ளும்போது நம் வளம் கூடுகிறது என்ற விழிப்புணர்வு நமக்கு மன அமைதியைத் தரக் கூடும். 

இந்த பிரபஞ்சமும், பூமியும், வர்ணிக்க முடியாத வேற்றுமைகளின் சங்கமத்தை, தங்கள் ஒற்றுமையால் அரவணைத்து இருப்பதை நாம் இவற்றின் அமைப்பிலும் செயல்பாட்டிலும் நாம் உணரலாம்.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோரோ எனும் இயற்கை ஆர்வலரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. தோரோ மிக மிக எளிய வாழ்க்கையை விரும்பி வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு அழகான புல்வெளியும், மரங்களும் கலந்த ஒரு நிலத்தின் மீது ஈர்க்கப் பட்டு அதை வாங்க நினைத்தார். முன் பணத்த்தையும் செலுத்தினார். இந்த நிலத்தின் அழகையும் அற்புதத்தையும் தினம் அதனை காணும்போதே ரசிக்க முடிகிற போது எதற்காக நான் அதை என் பெயரில் வாங்க வேண்டும் என்ற உணர்தல் அவருக்கு வந்தது. நிலம் ஒருவர் பெயரில் இருந்தாலும், அதை ரசிப்பதன் மூலம், பலரும் அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்கள் ஆக முடியும்.

பழங்கால சீனாவில் வாழ்ந்த மெனிகஸ் என்ற எழுத்தாளர் சீனப் பேரரசரை தன் மாளிகைத் தோட்டத்தில் சாமானிய மக்களையும் அனுமதிக்க வைத்தார். இவ்வாறு செய்வதால் அரசரின் சந்தோஷம் கூடும் என்பதைப் புரிய வைத்ததார்.

இந்தியாவில், பல நூறாண்டுகளாக, அனைத்து உயிர்களும் கரை தாண்டும் வரை தங்கள் தேவைகளைப் பொருட்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை  எடுக்கும் போதிசத்வர்களின் சரித்திரம் உண்டு.

இன்று நாம் ஒருவருடன் ஒருவர் மிக எளிதில் தொடர்பு கொள்ளும் நிலையை அடைந்து இருக்கிறோம். இதனால், நாம் தொலை தூரத்தில் வாழ்பவர்களைக் கூட சந்திக்க முடியும். சேர்ந்து, அமர்ந்து, கதைகள் பல பரிமாறி, உணவுடன் அருந்த முடியும். காலம் காலமாக, அதிதிகளை திறந்த மனதுடன் வரவேற்கும் விருந்தோம்பலின் தர்மம், இன்றைய் உலகிலும் நம்மை அழைக்கிறது.

Tree of Life by Eknath Easwran

Original Reading:
http://www.awakin.org/read/view.php?tid=132 

வாழ்க்கை மரம் போன்றது
- ஏக்நாத் ஈஸ்வரன்

“மரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவன், காட்டைக் கோட்டை விட்டான்” என்ற பழமொழியை நாம் கேட்டு இருக்கலாம். அதே போல் நம்மில் பலர், இலைகளைப் மட்டும் பார்த்துக் கொண்டு, மரத்தைக் காண்பதில்லை, என்றும் கூட சொல்லலாம். பல்லாயிரம் . இலைகளின் கூட்டத்தில் ஆழ்ந்து போவதால்,, மரம் என்று ஒன்று இருப்பதையே நாம் மறக்கிறோம். 

மரம் இல்லாமல் இலை இல்லை என்பது நமக்கு புரிவதில்லை. மரத்தின் உயிர் திரவம்தான் இலைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் நவீன வாழ்வில் இலை போன்ற தனித்துவத்திற்கே முதலிடம் கொடுக்கப் படுகிறது. “உன்னுடைய சந்தோஷத்தையும், பூரணத்துவத்தையும், உனக்கே உரித்தான, தனி வழியில் தேடு” என்ற செய்தி, தினம் நம்மை பல வகைகளில் வந்து அடைகிறது. நாம் தனித்துவத்தில் திருப்தியை நாடி, ஓடுவதற்கு காரணம், மரமே இல்லாமல் இலை மட்டும் செழிக்க முடியும் என்ற தவறான புரிதலே,

Committee of the Mind by Thannisaro Bhikku

Original Reading:
http://www.awakin.org/read/view.php?tid=953

மனதின் குழு
- தன்னிசாரோ பிக்கு

உங்கள் மனதில் நீங்கள் யார் என்பதைப் பற்றிய பல அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு  அடையாளமும் ஒரு தனி 'நீங்கள்' என்று கருதலாம். இந்த அடையாளங்கள் எல்லாம், மனம் என்னும் குழுவின் உறுப்பினர்கள்.

இதனால்தான், நம் மனம் என்பது ஒரு-மனமாக இல்லாமல், பல குரல்களும், விருப்பங்களும் கொண்ட ஒரு கூட்டம் போலத் தோன்றுகிறது.. இந்த மனக்குழுவின் சில உறுப்பினர்கள், தங்கள் ஆசைகளுக்கு ஆதாரங்கள் என்ன என்பதைப் நேர்மையுடன் தெரிவிக்கிரார்கள். குழுவின் மற்ற நபர்கள், அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கிரார்கள்.

இந்த உள் வேலைகளை வெளிப்படையாக்கி, குழுவை கொஞ்சம் சீரமைப்பது நாம் தியானம் செய்வதன் ஒரு நோக்கம். இதனால் நம் உண்மையான சந்தோஷத்தை விரும்பும் பல எண்ணங்கள், ஒன்றோடு ஒன்று நல்லிணக்கத்துடன் சேர்ந்து செயல் பட இயலும்.

இந்த எண்ணங்ளையும் விருப்பங்களையும் கூட, நாம் ஒரு குழுவாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படி செய்வதால், தியானத்தைப் பயிற்சியாக செய்வது நம்முடைய சில விருப்பங்களுக்கு எதிராகத் தோன்றினாலும், எல்லா  விருப்பங்களுக்கும் அது எதிரானது அல்ல என்பது நமக்குத் தெளிவாகும். சில இணக்கம் இல்லாத விருப்பங்கள் வெளியேறும் போது, நம்மால் அதைப் பெரிது படுத்தாமல் இருக்க முடியும். இந்தக் குழுவின் நல்லெணங்களைக் கொண்டு மற்ற எண்ணங்களுக்கு நாம் பயிற்சியும் கொடுக்க முடியும். இப்படி செய்வதால் உண்மையான சந்தோஷம் என்ன என்பதை நம் மனதால் உணர முடியும்.

மனக்குழுவின் பல உறுப்பினர்கள் தற்காலிக சந்தோஷத்தைத் தேடித் தேடி அலைவதால், மனதின் பல பரிணாமங்கள், தங்கள் இயல்பு நிலையில் இருந்து, மாறு பட்டு இருக்கின்றன. இதில் ஒரு பரிணாமம், இடங்களாலும், காலங்களாலும், பாதிக்கப் படாதது.. நிபந்தனை அற்றது.. இது மொத்த சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவம் செய்யும் பரிணாமம். குழுவின் சரியான உறுப்பினர்களுக்கு சரியான பயிற்சி கொடுப்பதன் மூலம் நாம் இந்த பரிணாமத்தை அடைய முடியும்.

இந்தப் பரிணாமத்தைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது உப்பு நீரில் உள்ள நல்ல நீர் போன்றது. நம் சாதாரண மனது உப்பு நீர் போன்றது - குடித்தால் உடல் நிலை சரி இல்லாமல் போகும். இந்த நீரை அப்படியே விட்டு வைத்தால், நல்ல நீர் தன்னாலே பிரிந்து தனியாக வராது. இதைப் பிரித்து எடுக்க, நாம் முயற்சி செய்தால் மட்டுமே முடியும். ஆனால், நம் முயற்சியால் நல்ல நீர் என்பது புதிதாக இங்கே உருவாகவில்லை. ஏற்கனவே நம் உள்ளிருக்கும் நல்ல நீர்தான், பிரிந்து வந்து நம் தாகத்தைத் தீர்க்கிறது.