Thursday, March 26, 2015

Experiential Wisdom by S. N. Goenka

அனுபவத்தால் வரும் மெய்யறிவு
- S.N. கோயங்கா

Oringial Reading:
http://www.awakin.org/read/view.php?tid=55

மெய்யறிவு என்பதற்கு, சரியாக அறிவது என்று பொருள். மேலோட்டமான உண்மையை அறிவது மெய்யறிவு ஆகாது. ஒரு குழந்தை, ஒரு வைரத்தைப் பார்த்தால், அது அழகான பளபளக்கும் கல் என்று புரிந்து கொள்ளும். அதையே ஒரு நல்ல ஆசாரி பார்த்தால், அதன் குறை நிறைகளை ஆழமாக அறிந்து, அதன் விலையை சரியாக கணிப்பார். இதைப் போல், எந்த ஒரு சூழ்நிலையையும், ஆழத்துடன் நோக்கி, அடியில் படிந்து இருக்கும் முழுமையான உண்மையை, சரியாக புரிந்து கொள்ளும் திறனே மெய்யறிவு.

இந்த அறிவை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று கேள்வி ஞானத்தாலோ, பிறர் கருத்துக்களைப் படிப்பதாலோ வருவது. இரண்டாவது, நம் கருத்துக்களைக் கொண்டு, அலசி ஆராயும் பகுத்தறிவால் வருவது. இவை இரண்டும், வாழ்க்கையில் உபயோகமாக இருந்தாலும், பிறர் வழியே நம்மை அடைந்த காரணத்தால், இவற்றால் நீண்ட காலப் பயன் நமக்கு கிடைப்பது இல்லை.
      
மூன்றாவது வகையானது, நம் சொந்த அனுபவத்தால் நமக்குள் மலரும் மெய்யறிவு. இந்தப் பயனுள்ள அறிவாற்றலை மேம்படுத்த, நாம் அறநெறிகளைப் பின்பற்றுவதும், விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அவசியம். இந்த  மேம்பட்ட நிலையில் நிற்கும் மனதால் மட்டுமே, உண்மையை, உள்ளது போல், புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், முடியும்.

கரு / கேள்வி:
உங்கள் அனுபவத்தில் மலர்ந்த ஒரு மெய்யறிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, March 20, 2015

Unproduced Stillness by Adyashanti

Original reading: 
http://www.awakin.org/read/view.php?tid=343
  
தயாரிக்காத மௌனம்
- ஆத்யஷாந்தி


மௌனம், அமைதி, விழிப்புணர்வு போன்றவற்றை நாம் உருவாக்க முடியாது. அவை நாம் தயாரிக்க கூடிய நிலைகள் இல்லை. பெயரும், உருவமும் அற்ற மௌனம் என்னும் சாட்சியில்தான் எல்லா நிலைகளும் எழுவதும், பின்பு விழுவதும் நடக்கிறது. நாம் இந்த சாட்சியாக, அமைதியில் இருக்கும்பொழுது மற்ற எல்லாம் அதனதன் இயற்கையில் இயங்குகின்றன. மனதின் கட்டாயப் பிடியில் இருந்து நம் விழிப்புணர்வு விடுபடுகிறது.

எண்ணங்களின் ஓயாத அசைவுகளால் தொட முடியாத ஒன்றை நம் அனுபவத்தின் மூலம் கண்டுபிடிப்பது நம் ஆன்மீக பயிற்சியின் நோக்கமாகும். இதற்காக நம் எண்ணங்களை அடக்கத் தேவை இல்லை, மூளையை மட்டும் பயன்படுத்தி எல்லவற்றையும் புரிந்து கொள்ள வேண்டியதும் இல்லை. நம்முள் எப்பொழுதும் இருக்கும், நாம் அறியாத, அசையாத மூலத்தை அறியும் முயற்சியில் நாம் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் நம் எண்ணங்கள் உண்மையை பிரதிபலிக்கத் தொடங்கும். இல்லாவிடில் கருத்துக்களால் மட்டும் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மட்டுமே நம்மால் காண முடியும்.

நான் பேசுவது எண்ணம், கருத்து, நம்பிக்கை - இவற்றின் வழியே மட்டும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும், நிர்பந்தம் இல்லாத மனதின் ஒரு நிலையப் பற்றி;  நம்முடைய பாதுகாப்புக்காக மனதையோ, உணர்வுகளையோ, உணர்ச்சிகளையோ மேற்கோள் காட்டாமல், எல்லா  பிரிவுகளையும் நாம் மறந்து, மனம்  விடுதலை அடையும் நிலையைப் பற்றி.

Friday, March 13, 2015

It All Goes Wrong Anyway by Ajahn Brahm

Original reading: 
http://www.awakin.org/read/view.php?tid=1062

தவறுகள் நடக்கத்தான் செய்யும்
- ஆஜான் ப்ரஹ்ம


நாம் வாழுமிடம் ஆஸ்ரமமாக இருக்கலாம், ஒரு நகரமாக இருக்கலாம்
அல்லது ஒரு அமைதியான மரங்கள் சூழ்ந்த தெருவாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் பிரச்சினைகளும் கஷ்டங்களும் அவ்வப்ப்போது
வருவது என்பது இயற்கையே. சில முறை பழுதாவதுதான் நம் வீட்டில்
இயங்கும் பொருட்களின் இயற்கை,. வாழ்க்கை தங்கு தடங்கலின்றி
செல்ல வேண்டும் என்று நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும்
அப்படி நடப்பது அரிது.


துக்கம் என்ற வார்த்தையின் ஒரு ஆழமான அர்த்தம்,.உலகம் நமக்கு
கொடுக்க முடியாத ஒன்றை அதனிடம் கேட்பது. மிகச் சரியான ஒரு
வீடும், வேலையும் வேண்டும் என்று கேட்கிறோம். இப்பொழுதே ஆழ்ந்த
தியானமும், ஞானமும் வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் இந்த
பிரபஞ்சத்தினால் இவற்றைத் தர இயலாது. தர முடியாத ஒன்றைக்
கேட்கிறோம்.என்றால் துக்கத்தைக் கேட்கிறோம்.என்றுதான் பொருள்.


பணி செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், அவ்வப்போது சில
தவறுகள் நேரிடும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய
வேலை, இந்த உலகத்தை நம் ஆசைக்கேற்ப மாற்றுவதல்ல. நம்முடைய
பணி, கவனித்து, புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, விட்டு விடுதல் ஆகும்.

உடல், மனம், குடும்பம் மற்றும் உலகத்துடன் நாம் சண்டை போட போட,
நம்மால் உண்டாகும் காயங்களும், நமக்கு உண்டாகும் வலியும்,
அதிகமாகும்.


சில சமயங்களில் நம்மால் தினசரி வாழ்வில் இருந்து சற்றே தள்ளி
நின்று மொத்தமாக வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது. அவ்வப்போது
தவறுகள் நடப்பது இயற்கையே என்று புரிந்து கொள்ள முடிகிறது. நாம்
உழைக்கிறோம், கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறோம், நம் வீடு, மனம்,

உடல் மற்றும். வாழ்க்கையை, மிக சரியானதாக அமைப்பதற்கு பாடு
படுகிறோம்,  ஆனாலும், எல்லாவற்றிலும், கொஞ்சம் தவறுகள் நடக்கத்தான்
செய்யும்.

Friday, March 6, 2015

We Move in Infinite Space by Rainer Maria Rilke

Original reading: 
http://www.awakin.org/read/view.php?tid=957

முடிவில்லா வெளீயில் பயணம்
- ரெய்னெர் மரியா ரில்க


சோகம் வந்தடையும் தருணங்கள் எல்லாம் பதற்றம் மிக்க, உணர்வுகளை இழந்த தருணங்களாக நமக்கு தோன்றுகின்றன, அறிமுகமில்லாத ஒரு புதிய நிலையுடன் நாம் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை; நமக்கு தெரிந்த எல்லாம் ஒரு கணம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு விட்ட ஒரு நிலை. இருந்தாலும், ஒரு மாற்றத்தின் நடுவே நம்மால் நின்று கொண்டே இருக்க முடியாது. அதனால்தான் சோகம் என்பது கடந்து போகிறது.  புதிய நிலை நமக்குள் ஐக்கியம்மகி நம் ரத்தத்தோடு கலந்து போகிறது.

இதனால் ஒரு விருந்தாளியின் வருகையால் ஒரு வீடு எப்படி மாறுகிறதோ அப்படி நாம் மாறிப் போகிறோம். வந்தவர் யார் என்று யோசிக்கிறோம். அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், நம்முடைய எதிர் காலம்தான், அது நிகழ்வதற்கு வெகு முன்பே, நமக்குள் புகுந்து, உருமாறி, அமர்ந்து இருக்க்கிறது என்று சொல்லலாம்.  இதனால் சோகமாக இருக்கும்போது மிக கவனத்துடன் இருப்பது நல்லது.

எந்த அளவுக்கு சோக நிலையில் நாம் அமைதியுடன், பொறுமையுடன், திறந்த மனதுடன் இருக்கிறோமோ அந்த அளவுக்கு, ஆழமான, தெய்வீகமான ஒரு நிலை நமக்குள் நுழைய முடியும். எந்த அளவுக்கு அதை நாம் வரவேற்று நமதாக்கிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு அது நமது விதியாக மாறுகிறது. பின்னர் அது நிகழ்காலமாகி நடக்கும்போது, அதை நம் உள்ளூயிரால் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு நாம் மன வளர்ச்சி அடையும் போது நமக்கு நிகழ்வது எல்லாம் நமக்குள் வெகு காலமாக இருந்தவையே; வெளியில் இருந்து வருவன இல்லை என்பது தெளிவாகிறது. தீதும் நன்றும் பிறர் தந்து வருவது இல்லை. விதி என்பது நம்முள் இருந்தே வெளிப்படுகிறது என்பது புரிகிறது.

பெரும்பாலான மக்கள், எதிர்காலம் தன்னுள் நுழையும்போது அதை கவனித்து ஐக்கியம் செய்வதில்லை, அதனால் அது நிகழ்காலமாக மாறி நடக்கும்போது, அதை அடையாளம் கண்டு கொள்ளவதும் இல்லை. தாம் கவனித்த அந்தத் தருணம் வரை, அது எங்கு இருந்தது என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறார்கள்.

பூமியை சுற்றிதான் சூரியன் வருகிறது என்று பண்டைய மக்கள் தவறாக நினைத்தது போல நாமும், காலத்தின் வருகைப் பற்றி தவறாக நினைக்கிறோம். காலம் நின்று கொண்டு இருக்கிறது. நாம்தான் முடிவில்லா வெளியில் நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.