Thursday, February 26, 2015

Serving is Different From Helping and Fixing by Rachel Naomi Remen


Original Reading:
http://www.awakin.org/read/view.php?tid=940 

 
சேவை, உதவி, சரி செய்தல் - வித்தியாசங்கள்.
- ரேச்சல் நவோமி ரேமென்  


சமீப காலத்தில் என்னால் எப்படி உதவ முடியும் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்து உள்ளது. அதையே சற்று ஆழமாக என்னால் எப்படி சேவை செய்ய முடியும் என்று கேட்கலாம்.

சேவை என்பது உதவியிலிருந்து வித்தியாசப் படுகிறது. உதவி என்பது சரி சமமான நிலையில் உள்ள இருவருக்கு இடையிலான உறவு அல்ல. நான் ஒருவருக்கு உதவும் போது அவர் என்னை விட பலவீனமாக இருப்பதாக என் மனதில் எண்ணம் தோன்றுகிறது. நான் இவ்வாறு நினைப்பதை அவராலும் உணர முடியும். இதனால் அவருடைய தன்மானம், சுய மரியாதை, பூரணத்துவம் ஆகியவற்றில் குறைப்பாடு ஏற்படுகிறது. ஆக, அவருக்கு நான் கொடுப்பதை விட, அவரிடம் இருந்து நிறைய எடுக்கப் படுகிறது.

ஆனால், நாம் சேவை செய்யும்போது, நம் பலத்தை மட்டும் கொண்டு செய்வதில்லை. நம் அனுபவங்கள், பலவீனங்கள், வரம்புகள், காயங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான நிலையில் இருந்து செய்கிறோம். நம்மில் இருக்கும் பூரணத்துவத்தைக் கொண்டு வாழ்வின் பூரணத்துவத்திற்கு சேவை செய்கிறோம். சேவை என்பது சரி சமமான நிலையில் உள்ள இருவருக்கு இடையிலான உறவு.

உதவி என்பதன் கூடவே, கடன் என்பதும் வந்து விடுகிறது. ஆனால் சேவை என்பது ஒரு பரஸ்பர பரிமாற்றம். இதில் கடன்படுவது என்பது இல்லை. நாம் எந்த அளவுக்கு சேவை செய்கிறேனோ, அந்த அளவுக்கு நமக்கும் திருப்தியும், நன்றி உணர்வும் நிலைக்கின்றது.

சேவை என்பது ‘சரி செய்தல்’ என்பதில் இருந்தும் வித்தியாசப் படுகிறது. ஒருவரை உடைந்து போனவராக பார்க்கும் பொழுதுதான் அவரை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இந்த சமயத்தில் இன்னொருவரின் பூரணத்துவத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.

நமக்கும், நாம் சரி செய்ய முயலும் நபர் அல்லது சூழ்நிலைக்கும் ஒரு இடைவெளி உருவாகிறது. சரி செய்வது என்பது ஒரு மதிப்பெண் போடும் செயல் ஆகும். இந்த செயல், தன் இடைவெளியால், இருவருக்கிடையே உள்ள தொடர்பை குறைத்து, நாம் வேறு, அவர் வேறு என்ற அனுபவத்தை உருவாக்குகிறது.

சேவை என்பது, தூரத்தில் இருந்து செய்ய முடியாதது. யார் யாரிடம் நாம் ஒருமையை உணர்கிறோமோ, எதைத் தொட நம் மனம் அஞ்சுவதில்லையோ, அவருக்கும், அதற்கும் தான், நாம் சேவை செய்ய முடியும். வாழ்க்கை புனிதமானது என்பதால் நாம் அதற்கு சேவை செய்கிறோம்..அது உடைந்து இருக்கிறது என்பதால் அல்ல.

No comments:

Post a Comment